ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பரமக்குடி அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் கரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சத்திய பிரதாப் யாதவ் சேர்ந்து ஆய்வு மேற்கொண்டார்.
பின் மாவட்ட ஆட்சியர் வீர ராகவ ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 434 பரிசோதனைகள் செய்ததில் 839 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 594 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் தினசரி 300 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட முழுவதும் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளிலும் கரோனா நோயாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு உள்ளிட்ட மையங்களில் 900 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்தின் இதர பகுதிகளில் உள்ள தாலுகா மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள் என 1,559 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் உணவுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதிலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, அங்கு நாள்தோறும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அருகில் வசிப்பவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது என கூறினார்.