உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - நியூசிலாந்து அணிகள் விளையாடிவருகின்றன. பிர்மிங்ஹாம் நகரின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தால் இப்போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீசத் தீர்மானித்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்து வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 5 ரன்களில் நடையைக் கட்டினார். அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் டூப்ளஸில், ஹசிம் ஆம்லா உடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடி வந்தார்.
இந்த ஜோடி 50 ரன்களை சேர்த்த நிலையில், டூப்ளஸிஸ் 23 ரன்களில் அவுட் ஆனார். இதனால், தென்னாப்பிரிக்க அணி மீண்டும் ரன்குவிப்பில் தடுமாறிவருகிறது. சற்று முன்வரை தென்னாப்பிரிக்க அணி 17 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 66 ரன்களை எடுத்துள்ளது. ஆம்லா 34 ரன்களுடனும், மார்க்ரம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.