சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன். தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர்கள் சங்கம் என்கிற அமைப்பை பதிவு செய்து பொதுச்செயலாளராக செயலாற்றி வருகிறார். இவரை மதுவிலக்கு உதவி ஆய்வாளர் நாதமுனி என்பவர் மப்டியில் வந்து சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த தேவேந்திரன் நாதமுனி, மதுவிலக்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் ஆகியோர் குறித்து தகாத வார்த்தைகளால் திட்டி ஆடியோ வெளியிட்டார்.
இதையடுத்து, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்ததாக வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனை மதுவிலக்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் கைது செய்தார்.
கைது செய்ய முற்படும்போது தப்பிக்க முயற்சி செய்த தேவேந்திரன் பாலத்திலிருந்து விழுந்து கை எலும்பு முறிவு ஏற்பட்டதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து தேவேந்திரனின் கை எலும்பு முறிவு தொடர்பாக காவல் துறை விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து தேவேந்திரன் கூறுகையில், "காவல் துறையினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. தன்னார்வலரான தன்னை பொய் வழக்குப் போட்டு மதுவிலக்கு ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் கைது செய்து ஆவடி அருகே ஒரு தனி இடத்தில் வைத்து தனது கையை உடைத்தார்.
மேலும் என் குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்வதாகவும் கொலை செய்துவிடுவதாகவும் ஜார்ஜ் மில்லார் மிரட்டி வருகிறார்.
சாதாரண உடையில் குண்டர்களுடன் தினமும் வீட்டுக்கு வந்து மிரட்டல் விடுத்து வரும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
பாதுகாப்பு வழங்க முடியாதபட்சத்தில் குடும்பத்தினருடன் தற்கொலை செய்துகொள்ள அனுமதி தர வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ராமதாஸ் பிரதமருக்கு கடிதம்!