தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர் கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான அரிசி ஆலையில் அரசின் விலையில்லா ரேசன் அரிசி 21 டன் கொண்ட 420 மூடைகளை வெளி மாநிலங்களுக்கு கடத்த பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை டிஎஸ்பி இளங்கோவன் உத்தரவின் பேரில், தூத்துக்குடி காவல் ஆய்வாளர் செல்வி, காவல் உதவி ஆய்வாளர் வேல்ராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் ரேசன் அரிசி மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கண்ணன் (50), லிங்கேஷ், சுயம்புலிங்கம், பாபு, சுவாமிநாதன், நல்லரசு உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி, இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன.
அரிசி மூடைகள் விசாரணைக்கு பின் மாவட்ட உணவு பாதுகாப்பு கிட்டங்கில் ஒப்படைக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.