பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் ஒன்றிய பகுதிகளில் அதிக அளவு சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஆடிப்பட்டம் தொடங்கியுள்ளதால் விவசாயிகள் சின்ன வெங்காய சாகுபடிக்காக நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நடவுகாக வைத்திருந்த ஐந்து மூட்டை சின்ன வெங்காயம் திருடப்பட்டுள்ளது.
நாட்டாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பச்சமுத்து என்ற விவசாயி தனது நிலத்தில் சின்ன வெங்காயம் நடவு செய்வதற்காக பட்டரை போட்டு சின்னவெங்காயத்தை பாதுகாத்து வந்தார். இந்நிலையில் நேற்று(ஜூலை 11) அடையாளம் தெரியாத நபர்கள் ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள 325 கிலோ எடைகொண்ட ஐந்து மூட்டை சின்ன வெங்காயத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து விவசாயி பச்சமுத்து பாடாலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் அடிப்படையில், பாடாலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேசமயம் சின்ன வெங்காயம் திருட்டு சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவது விவசாய மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.