வேலூர் மாவட்டத்தில் 10, 12ஆம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார். மாவட்டத்தில் உள்ள 160 உயர்நிலைப் பள்ளிகள், 121 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும், 10ஆம் வகுப்பு மாணவர்கள், 18 ஆயிரத்து 200 பேர், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 13 ஆயிரத்து 150 பேர் என மொத்தம் 31 ஆயிரத்து 350 பேருக்கு தமிழ்நாடு அரசின் இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்பவுள்ளன.
இவ்விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம், "மதிப்பெண்கள் எப்போதும் முக்கியம் அல்ல. நான் 10ஆம் வகுப்பில் 400 மதிப்பெண்களும் 12ஆம் வகுப்பில் 800 மதிப்பெண்களும்தான் எடுத்தேன். ஆனால், இன்றைக்கு நான் ஐஏஎஸ். மேலும் பாடங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம், புரிந்து படியுங்கள். அதே சமயம் கரோனாவை கண்டு பயப்பட வேண்டாம்" என நம்பிக்கையூட்டும் வகையில் மாணவர்களிடம் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "நேற்று (ஜூலை 15) மட்டும் 1,250 பேருக்கு மேல் பரிசோதனை மேற்க்கொள்ளப்பட்டுள்ளது. இன்று 280 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. காலதாமதமாக சிகிச்சைக்கு வந்ததால், பேர்ணாம்பட்டைச் சேர்ந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆகவே, அறிகுறி தென்பட்டவுடன் சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், குணமடைந்து வீடு திரும்புவோரை சொந்த வாகனங்களிலே வீட்டிற்கு அனுப்பி வைக்கின்றோம்.
மேலும், தந்தை பெரியார் அரசுப் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டில் 75 நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் மூலம் இன்று முதல் சிகிச்சையளிக்க உள்ளோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 45 ரேஷன் கடை ஊழியர்களுக்கு பதிலாக மாற்று பணியாளர்களைக் கொண்டு இன்று முதல் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் மாவட்டத்தில் தொடர்ந்து படுக்கைகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தி வருகிறோம். தற்போது 3,400 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன" என்றார்.