கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரியார் அண்ணா நினைவகத்தில் பணியாற்றிவந்த காவலாளிக்கு கடந்த மூன்று நாள்களாக காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்துவந்ததை அடுத்து, அவருக்கு சளி ரத்த மாதிரிகள் நாகை அரசு மருத்துவமனையில் எடுக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்றுநோய் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஈரோடு இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதாரத்துறையின் கண்காணிக்கப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கண்காப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.
கோவிட்-19 பாதிப்பிற்குள்ளான காவலாளி பணியாற்றிவந்த பெரியார் அண்ணா நினைவகமும், அலுவலக பணிகள் மேற்கொண்டுவந்த செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மேலும், அவரது குடியிருப்பு பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மைப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேபோல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.