ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணைப்பூங்காவில் இருந்து புங்கார் கிராமத்துக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்திய காட்டுயானையால் கிராமமக்கள் அச்சமடைந்தனர்.
தற்போது இரு நாள்களாக பவானிசாகர் வனத்துறையினர் யானை நடமாட்டத்தை கண்காணித்து கட்டுப்படுத்தியதையடுத்து பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனக்கோட்டம் அணைப்பூங்காவில் இருந்து வெளியேறிய ஒற்றையானை கடந்த சில நாள்களாக அருகில் உள்ள புங்கார் காலனி கிராமத்துக்குள் புகுந்து கிராமமக்கள் அச்சுறுத்தி வந்தது.
மேலும் அங்குள்ள விவசாயப்பயிர்களை சேதப்படுத்தியது. நாள்தோறும் யானையின் அட்டகாசத்தால் அப்பகுதி மக்கள் நிம்மதியிழந்தனர்.
யானையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, பவானிசாகர் வனச்சரக அலுவலர் மனோஜ்குமார் தலைமையில் 14 பேர் கொண்ட வனப்படை அமைக்கப்பட்டு 3 குழுக்களாக யானையை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் சாலை, அணைநீர்ப்பிடிப்பு பகுதி, தெங்குமரஹாடா சாலை, ஜீரோ பாயின்ட் மற்றும் அணைப்பூங்கா ஆகிய பகுதியில் தனிப்படையினர் யானையை நடமாட்டத்தை கண்காணித்து மீண்டும் ஊருக்குள் புகாதபடி பட்டாசு வெடித்து நடவடிக்கை எடுத்தனர்.
தற்போது 24 மணி நேர தொடர் கண்காணிப்பில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளதால் ஒற்றையானை மீண்டும் ஊருக்குள் வருவது தடுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் ஒற்றையானை நடமாட்டத்தால் பொதுமக்கள் அணைப்பகுதியில் அமர்ந்து இளைப்பாற வேண்டாம் எனவும் அணைப்பூங்கா சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.