தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (ஜுலை 10) இரவு தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் காவல் துறையினர் வழக்கு ஆவணங்களை சிஐபியிடம் ஒப்படைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிபிஜ அலுவலர் விஜயகுமார் சுக்லா தலைமையிலான எட்டு பேர் கொண்ட குழுவினர் இன்று (ஜூலை 11) முதல் சாத்தான்குளத்தில் விசாரணையைத் தொடங்க உள்ள நிலையில் நேற்றிரவு (ஜுலை 10) அவர்கள், நெல்லை அரசு விருந்தினர் மாளிகை வந்தனர்.
அங்கு அவர்கள், சிபிசிஐடி காவல் துறையினர் வழங்கிய ஆவணங்களின் அடிப்படையில் வழக்கின் தன்மை குறித்து ஆலோசனை செய்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் சிபிசிஐடி காவல் துறைத் தலைவர் சங்கர், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் அணில்குமார் ஆகியோருடன் சிபிஐ அலுவலர்கள் ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்பு, சாத்தான்குளத்தில் உள்ள ஜெயராஜ், பென்னிக்ஸ் வீடு மற்றும் கடை பகுதி, காவல் நிலையம், அரசு மருத்துவமனை, கோவில்பட்டி கிளை சிறைச்சாலை உள்ளிட்ட இடங்களில் புலனாய்வு விசாரணை செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.