தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கிராமத்தில் சுரபி நதிக்கரையில் அமைந்துள்ளது,சுயம்பு சனீஸ்வரர் திருக்கோவில். பொதுவாக நவக்கிரகங்களில் ஒன்றாகவோ அல்லது சில வழிபாட்டுத் தலங்களில் துணைக் கோயில்களில் மட்டும் காட்சி தரும் சனீஸ்வரர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளது, தேனி மாவட்டத்தில் தான்.
இத்தகைய பிரசித்திபெற்ற இத்திருத்தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருந்திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். ஆடி மாத முதல் சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, ஒவ்வொரு வார சனிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சனீஸ்வரர் - நீலாதேவி அம்மன் திருக்கல்யாணம், உற்சவர் ஊர்வலம் அதனைத் தொடர்ந்து சோனை கருப்பண்ண சுவாமிக்கு கறிவிருந்து, மதுப்படையல் ஆகியவைகள் இடம்பெறும்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயில் ஆடித் திருவிழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் பெறுவர்.
இந்நிலையில் இந்தாண்டு ஆடிப்பெருந்திருவிழா வரும் ஜூலை 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்றுப் பரவலால் ஆடிப்பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோயில் செயல் அலுவலர் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அதில் கூறியதாவது;'கரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக தேசிய ஊரடங்கு, தமிழ்நாடு அரசு ஊரடங்கு உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாண்டு நடைபெறவிருந்த ஆடி பெருந்திருவிழா ரத்து செய்யப்படுகிறது. சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும். எனவே பொதுமக்கள், பக்தர்கள், உபயதாரர்கள் திருக்கோயிலுக்கு வருகை தர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது’ இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆடி மாதத்திற்குள் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் நீங்கி, சனீஸ்வர பகவானைத் தரிசிக்கலாம் என்று எதிர்பார்த்திருந்த பக்தர்கள் தற்போது ஏமாற்றத்தில் உள்ளனர்.