அயோத்தியில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி, ஸ்ரீ ராமருக்கு கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்திய பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவிற்காக நாடு முழுவதிலும் உள்ள புனித தீர்த்தங்களில் இருந்து திருமண், தீர்த்தங்கள் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் ஓடும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதியில் இருந்து அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்காக நடைபெறும் பூமி பூஜைக்கு புனித மண் எடுத்து செல்லும் நிகழ்வு, நெல்லை குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் வைத்து நடைபெற்றது.
விசுவ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் தாமிரபரணியில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண்ணுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அயோத்தி மாநகருக்கு எடுத்து செல்லப்பட்டது. இந்நிகழ்வில் விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்பினர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.