ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த பெரியகுளம் சுற்றுவட்டாரத்தில் சம்பங்கிப்பூ அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்குள்ள சுமார் ஆயிரம் விவசாயிகளின் வாழ்வாதாரம் சம்பங்கிப்பூ சாகுபடியை நம்பியுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் பாதிப்பு காரணமாக, சம்பங்கிப்பூக்களை வாங்க ஆளில்லாமல் குளத்தில் கொட்டினர். பூக்களைப் பறிப்பதற்கு கூலி கொடுத்து நஷ்டத்தை சந்தித்து வந்தனர்.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில், சில நாள்களாக பூக்கள் விற்பனையாகத் தொடங்கியது.
கடந்த ஒரு வாரமாக சம்பங்கிப்பூ கிலோ ரூ.10க்கு விற்கப்பட்டது. தற்போது கர்நாடகத்தில் கோயில்கள் திறக்கப்பட்டதால், சத்தியமங்கலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பூக்கள் மைசூரு, பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வேன் மூலம் கொண்டுசெல்லப்பட்டது.
மேலும், கர்நாடகத்தில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால், கிலோ ரூ.10க்கு விற்கப்பட்ட சம்பங்கிப்பூ தற்போது ரூ.55 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து பூக்களின் விலையேறும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.