சேலம் மாவட்டம் கோரிமேடு அடுத்த பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன். தனது வீட்டில் பள்ளி மாணவிகளுக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
இவருக்கு இரண்டு மகள்கள், மூத்த மகள் அஜ்ஜூதர்ஷினி பத்தாம் வகுப்பு படித்துவருகிறார். இரண்டாவது மகள் தேஜூ தர்ஷினி மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். இருவரும் சேலம் சாரதா வித்யாலயா பள்ளியில் பயின்றுவருகின்றனர்.
இந்நிலையில் இரண்டு நாள்களுக்கு முன்பு தேஜூதர்ஷினி தனது தங்கையுடன் ராமகிருஷ்ணா சாலையில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் எடுக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு பத்தாயிரம் ரூபாய் ஏடிஎம் மையத்தில் கிடந்துள்ளது. இதனையடுத்து அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு வீடு திரும்பிய தேஜூதர்ஷினி தனது பெற்றோரிடம் நடந்த விவரத்தை தெரிவித்தார்.
இதனையடுத்து சங்கரநாராயணன் தனது மகள்களுடன் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்துக்குச் சென்று நடந்ததைக் கூறி 10,000 ரூபாயை ஒப்படைத்தார்.
தொடர்ந்து காவல் ஆணையர் செந்தில்குமார், மாணவிகளை நேரில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவித்து, நற்சான்றிதழ், ரூ.1000 கொடுத்து கௌரவித்தார்.
இந்த நிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த தேஜு தர்ஷினி, "நேர்மையாய் வாழ வேண்டும். அப்படி நேர்மையாய் இருப்பது என்பது அடிப்படையான மனிதப் பண்பு என்று எனது தந்தை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அடுத்தவர் பணத்துக்கு ஆசைப்படக் கூடாது என்று அவர் கற்றுக்கொடுத்திருக்கிறார். அதனால் நாங்களும் அப்படியே வளர்ந்திருக்கிறோம். நேர்மையாகப் படித்து நேர்மையாகவே சமுதாயத்தில் உயர்ந்த நிலையை அடைவோம்.
அதனால் எங்களுக்கு கிடைத்த பண வெகுமதி ஆயிரம் ரூபாயை பிரதமர் நிவாரண நிதிக்கு இன்று வழங்கியிருக்கிறோம் " என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.