கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு, பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராமன், அனைத்து துறை அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழ்நாடு முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்கும் இந்நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்.
அதன்படி சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு முனெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே இந்நோய் தொற்றில் இருந்து அனைவரையும் பாதுகாக்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் இந்நோய் குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்தும் துண்டு பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள் வாயிலாகவும், உள்ளூர் தொலைக்காட்சிகள் வாயிலாகவும் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பொதுமக்கள் அவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு வெளியில் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், அவசிய தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
அதேபோல் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து உரிய அனுமதியின்றி யாரேனும் வருகை தந்திருப்பது கண்டறியப்பட்டால் அருகில் உள்ளவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திகு தகவல் தெரிவிக்க வேண்டுமென அனைத்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இக்கூட்டத்தில் சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபாகணிகர், கூடுதல் இயக்குநர், திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை நா.அருள் ஜோதி அரசன், சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் ரா. திவாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.