சேலம் மாவட்டத்திற்குள் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து உரிய அனுமதியின்றி வருபவர்களால் கரோனா தொற்று அதிகரிப்பதாக மக்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், அரசிடமிருந்து உரிய அனுமதியின்றி, சேலம் மாவட்டத்திற்கு வருகை தரும் நபர்களையும், அவர்களைத் தங்கவைப்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களும் இதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டும். மாவட்ட எல்லைப் பகுதிகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து சேலம் மாவட்டத்திற்குள் வருகைதரும் பொதுமக்களையும், அவர்கள் பயணிக்கும் வாகனங்களையும் அரசு நிர்வாகம் தொடர்ந்து கவனித்து வருகிறது.
இதற்கிடையே கடந்த சில நாள்களாக சேலம் மாவட்டத்தில் சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களிருந்து உரிய அனுமதியின்றி சில நபர்கள் வருகின்றனர். அவர்களால் மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகம் பரவுகிறது. இந்நபர்கள் உரிய அனுமதியின்றி வருவதால் அவர்களைக் கண்டறிந்து உரிய பரிசோதனை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் உரிய அனுமதியின்றி வரும் நபர்களை, தங்கவைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் உரிய அனுமதியின்றி வரும் நபர்களைக் கண்டறிந்தால் உடனடியாக 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கோ அல்லது 0427-2450022, 2450023, 2450498, 73058-68942 என்ற சுகாதாரப் பணிகள் அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களுக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.