திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா, மேல்வசந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மகன் ஜெகநாதன் (40) என்பவரும், அதே ஊரைச் சேர்ந்த மனோகரன் மகன் சத்தியராமன், (36) என்பவரும் தொடர்ந்து கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இவர்கள் மீது காவல் துறையினர் பலமுறை வழக்குப்பதிவு செய்தும், மீண்டும் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் கண்ணமங்கலம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேற்கண்ட இரண்டு நபர்களின் சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த வேண்டி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி மேற்கண்ட இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலையில் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 41 பேர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.