இந்தியாவைப் பொறுத்தவரை பின்னலாடை நகரம் என்றாலே திருப்பூர்தான் அனைவருக்கும் ஞாபகம் வரும். இங்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி செய்துவரும் முக்கியமான நகராக திருப்பூர் விளங்கி வருகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பின்னலாடைகளுக்கு மூலப் பொருள்களான பட்டன், சாய ரசாயனங்கள், லேபிள்கள் என பல்வேறு பொருள்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பின்னர் ஆடைகள் தயாரிக்கப்படுகிறது.
இந்தாண்டு கரோனா பாதிப்பின் காரணமாக மார்ச் மாதத்திற்கு முன்பாக அனுப்பப்பட்ட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை பொருள்களுக்கு வெளிநாட்டு வர்த்தகர்களிடமிருந்து முழுமையான பணம் கிடைக்காத சூழல் நிலவுகிறது.
மேலும் 3ஆயிரம் கோடி ரூபாய் மேலான பின்னலாடை சரக்குகள் உள்ளூரிலேயே தேக்கம் அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பின்னலாடை உற்பத்திக்கு, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முக்கிய மூலப் பொருள்கள் துறைமுகங்களில் தேக்கம் அடைந்துள்ளது.
இதன் காரணமாக தற்போது செய்யப்பட்டுவரும் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கான பின்னலாடை உற்பத்தி கடுமையான பாதிப்பை சந்தித்து உள்ளதாகவும், ஏராளமான தொழிலாளர்களின் வாழ்வாதாரமான இத்துறையை மத்திய அரசு கவனத்தில் கொண்டு உடனடியாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருள்களை துறைமுகங்களில் இருந்து விடுவிக்க வேண்டுமென பின்னலாடை துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.