சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலை ஓரத்தில் அரசு அனுமதிபெற்று வியாபாரம் செய்யும் வியாபாரிகளிடம், சேலம் மாநகராட்சி நிர்வாகம் உரிய ரசீது வழங்கி வரிவசூல் செய்து வருகிறது.
இந்நிலையில் வரிவசூல் செய்யும் நபர்கள் போலி ரசீது வழங்கி பல லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி அலுவலகத்தில் பல முறை புகார் மனு அளித்தும், அலுவலர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனால், 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலகத்தை நேற்று திடீரென முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, போலி ரசீது வழங்கி பல லட்சம் ரூபாய் நூதன மோசடியில் ஈடுபட்ட நபர்கள், அவர்களுக்கு உதவியாக இருந்த மாநகராட்சி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையரிடம் சாலையோர வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.
மேலும் கரோனா வைரஸ் ஏற்படுத்திய பெரும் தாக்கத்தினால் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள சாலையோர வியாபாரிகளிடம், மோசடியில் ஈடுபட்ட அலுவலர்களிடம் இருந்து பணத்தை மீட்டு, மாநகராட்சி பணிகளுக்கு செலவிட வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடைகளின் நேரத்தை குறைக்கும் வியாபாரிகள் சங்கம்!