தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு ஆண்டிபட்டி – சேடபட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த கிராமத்தில் 8ஆவது வார்டுக்குட்பட்ட எம்.ஜி.ஆர் தெருவில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீரான முறையில் விநியோகிக்கப்பட வில்லை எனக்கூறி இன்று சாலையில் காலிக்குடங்களுடன் சுமார் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த ஊராட்சி நிர்வாகத்தினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, சீரான முறையில் குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பிறகு பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் இந்தப் பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது, பொதுமக்கள் குடிநீர் பிரச்னைக்காக சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.