அம்பத்தூரை அடுத்த அத்திப்பட்டு, மேட்டு தெருவைச் சேர்ந்தவர் வீரமணி (46). இவர், ரியல் எஸ்டேட் தரகர் ஆவார். இந்நிலையில், இன்று (ஜூலை 22) வீரமணி வீட்டு அருகேயுள்ள கழிவறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது, அங்கு ஆட்டோவில் வந்த மூன்று பேர் வீரமணியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்பு, அவர்கள் மறைத்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து வீரமணியைச் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அவர் அவர்களிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடியுள்ளார். இருப்பினும், மூன்று பேர் கொண்ட அக்கும்பல் அவரை விடாமல் விரட்டி சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், படுகாயமடைந்த வீரமணி தரையில் விழுந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துபோனார். இதன்பின் அக்கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. தகவலறிந்து, வீரமணி உறவினர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த அம்பத்தூர் காவல் உதவி ஆணையர் கண்ணன், காவல் ஆய்வாளர் பரணிகுமார் ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர், வீரமணியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இதுகுறித்த விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரமணியைச் செல்போனில் அடையாளம் தெரியாத நபர்கள் மிரட்டியுள்ளனர். இதுசம்பந்தமாக அவர் தனது மனைவி மகாலட்சுமியிடம் கூறியுள்ளார். இந்நிலையில்தான், அவரை அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிப் படுகொலை செய்துள்ளனது. இந்தக் கொலைக்கு நிலத்தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.