12ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பானக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 54 ஆவது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் கோலி முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 70 ரன்களை விளாசினார். பெங்களூரு அணி சார்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, 176 ரன் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 178 ரன்களை எடுத்தது. இதன் மூலம், பெங்களூரு அணி இப்போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹெட்மயர் 75, குர்கீரத் சிங் மான் 65 ரன்களை அடித்தனர்.
இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்ததால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு குறைந்துள்ளது. இந்தத் தொடரில், ஹைதராபாத் அணி 14 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 8 தோல்வி என 12 புள்ளிகளை எடுத்துள்ளது. மறுமுனையில், தோல்வியுடன் தொடரை தொடங்கிய பெங்களூரு அணி, கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று தொடரை முடித்துள்ளது அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சி பெற வைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 11 புள்ளிகளை பெற்ற பெங்களூரு அணி தற்போது 7ஆவது இடத்தில் உள்ளது.