1983 தமிழ்நாடு கடல்மீன் ஒழுங்குமுறை சட்டத்தின் படி, விசைப்படகுகள் கரையில் இருந்து மூன்று நாட்டிங்கல் தொலைவு பகுதிக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவு பாம்பன் முதல் தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடற்பகுதியில் 20க்கும் அதிகமான கிராமங்களை சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் நாட்டுப்படகு, சிறுதொழில் மீன்பிடிப்பு தொழில் நடத்திவருகின்றனர்.
ஆனால், கடந்த இரண்டு மாத காலத்திற்கு மேலாக சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் விதமாக விசைப்படகு மீனவர்கள் அரை நாட்டிங்கல்லுக்கு குறைவான கடல் தொலைவில் மீன் பிடித்துச் செல்வதால் சிறு தொழில் செய்யும் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக உதவி இயக்குநரிடம் மனு அளித்தும் முறையான நடவடிக்கை இல்லை.
மேலும் மீன்வளத்துறை தொடர்ந்து சிறுதொழில் மீனவர்களின் காதில் பூ சுற்றும் விதமாக பதில் அளித்து வருவதை கண்டித்து கடல் தொழில் சங்கம் சிஐடியு மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி தலைமையில் பல்வேறு சிறு தொழில் மீனவ சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் ஒருங்கிணைந்த இன்று (ஜூலை20) ராமேஸ்வரம் உதவி இயக்குனர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில், "ஜனவரி முதல் ஏப்ரல் வரை சீசன் தொழில் என்ற பெயரில் கடல் வளம் மற்றும் மீன் வளத்தை முழுமையாக அழித்தொழிக்கும் இரட்டைமடி மீன்பிடித் தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மீன்வளத்துறைக்கென தனியான ரோந்து படகு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் மீனவர்கள் காதில் பூ சுற்றியவறே மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: எட்டு வழிச் சாலை வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்!