இங்கிலாந்தில் கவுன்டி கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. இதில், ஹாம்பஷயர் - நாட்டிங்ஹாம்ஷயர் அணிகளுக்கு இடையிலான போட்டியின் மூலம், இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனான ரஹானே இங்கிலாந்து கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
நியூபோர்ட் நகரில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், ஹாம்ப்ஷயர் அணிக்காக விளையாடிவரும் ராஹனே தனது முதல் இன்னிங்ஸில் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும், அந்த அணி முதல் இன்னிங்ஸில் 310 ரன்களை சேர்த்தது. இதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய நாட்டிங்ஹாம்ஷயர் அணி 239 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து, 71 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஹாம்ப்ஷயர் அணியில் ரஹானே சதம் விளாசி மிரட்டினார். 197 பந்துகளில் 14 பவுண்டரிகள் என 119 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், கவுன்டி கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியில் சதம் விளாசிய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை ராஹனே படைத்தார்.
ராஹனேவிற்கு முன்னதாக, இந்திய வீரர் பியூஷ் சாவ்லா, முரளி விஜய் ஆகியோர் இச்சாதனையை படைத்தனர். ராஹனேவின் சதத்தால் ஹாம்பஷயர் அணி இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் இழப்புக்கு 367 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதைத்தொடர்ந்து, 439 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் நாட்டிங்ஹாம்பஷயர் அணி மூன்றாம் ஆட்டநாள் முடிவில் 42 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. போட்டி முடிய நாளை ஒருநாள் மட்டுமே உள்ளதால், ஹாம்ப்ஷயர் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில், ரஹானே தற்போது சத்தமே இல்லாமல் கவுன்டி கிரிக்கெட்டில் சதம் விளாசியது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.