நாகை அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வருபவர் செந்தில். இவர் நரிமனம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் செந்திலுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அகத்தியன் என்பவர் குடும்பத்திற்கும் நீண்ட நாட்களாக யார் பெரிய ஆள் என்ற பகை இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. குறிப்பாக, குளத்தில் மீன்களை குத்தகை எடுப்பது, உள்ளூர் பஞ்சாயத்து போன்றவைகளில் யார் பெரியவர் என்பதில் இருவருக்கும் 10 ஆண்டுகளாக தகராறு இருந்து வந்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அகத்தியனின் உடன் பிறந்த தம்பி கதிர், வாஞ்சூர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, செந்தில் தரப்பினர் கொலை செய்ய திட்டமிட்டதில் இருந்து தப்பித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து இரண்டு தரப்பிற்குமான பகை நீண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வாஞ்சூர் பகுதியில், அகத்தியனின் மகன் தினேஷை அடையாளம் தெரியாத நபர்கள் கொலை செய்ய அரிவாளுடன் துரத்தியதாக நாகூர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை விசாரித்த நாகூர் காவல்துறையினர் 107 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வாஞ்சூர் பகுதியில் உள்ள குளத்தின் மீன்களுக்கான குத்தகை நடைபெற்றுள்ளது.
வழக்கமாக குளத்தை அகத்தியன் குத்தகைக்கு எடுத்து வந்த நிலையில், இந்த முறை தான் எடுக்க வேண்டுமென ஏலத்தொகையை வேண்டுமென்றே அதிகரித்து கேட்டு வந்துள்ளார், செந்தில். 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கவேண்டிய குளத்தை செந்தில் சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஏலத்தொகையை ஏற்றி விட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து இரண்டு தரப்பிற்கும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த அகத்தியன், செந்திலை கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக கூலிப்படையை அழைத்து தொடர்ந்து செந்திலை நோட்டமிட்டு வந்த அகத்தியன் தரப்பினர், செந்திலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு சரமாரியாக பட்டப்பகலில் வெட்டிப் பழியை தீர்த்துள்ளது.
இதனைத்தொடர்ந்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் அகத்தியன், அவரது மகன் தினேஷ், உறவினர்கள் செல்வம், மணிகண்டன் ஆகிய நான்கு பேரும் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் எண் 2இல் சரண் அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே இருதரப்பிற்கும் மோதல் சம்பவம் நடைபெற்று வந்த நிலையில், காவல் துறை கரோனா கண்காணிப்புப் பணி காரணமாக, இந்த விவகாரத்தில் கவனம் செலுத்த முடியவில்லை என்று காவல் துறை வட்டாரங்கள் கூறியுள்ளன.