ஊரடங்கு உத்தரவு காலத்தில், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெண்கள், பொதுமக்கள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதனால், குடிக்கு அடிமையானவர்கள் திருந்தி வாழ வாய்ப்பாக இருந்து. கொலை, கொள்ளைச் சம்பவங்களும் குறைந்தன. விபத்துக்கள் ஏதும் நடக்கவில்லை.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதியளித்துள்ளதை, எதிர்த்து பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மதுக்கடைகளை திறக்கலாம் என அறிவித்ததும், குடியை விட்டவர்கள் நாளை மதுக் கடைகளுக்கு சென்று மது வாங்க ஆயத்தமாகி வருவது, கவலையளிக்கிறது. பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க அரசே துணை போகிறது என புதுகை மாவட்ட மக்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து புதுகை மக்கள் கூறியதாவது, "டாஸ்மாக் கடை மூடப்பட்டதால், குற்றச் சம்பவங்கள் கனிசமாகக் குறைந்தது. மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது, அனைத்துப் பெண்களுக்கும் தாய்மார்களுக்கும் மன நிம்மதியை கொடுத்தது. வாழ்வாதாரமின்றி தவிப்பவர்களுக்கு கூட தன் கணவர் பிள்ளைகள் குடியை விட்டு விட்டார்கள் என்ற மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால், தமிழ்நாடு அரசு மீண்டும் டாஸ்மாக் கடைகளை திறந்து, ஆண்களை மேலும் குடிக்கு அடிமைப்படுத்துவது சரியல்ல" என்று ஒரு பெண் கூறினார்.
"மதுக்கடையாவது, மண்ணாங்கட்டியாவது என்று நினைக்கத் தொடங்கியிருக்கும் இந்த வேளையில் மீண்டும் பெண்களின் தாலியை அழிப்பதற்காக இந்த அரசாங்கம் மதுக்கடைகளை திறக்கப் போகிறது. இந்த மதுவை குடிப்பதால் என்ன தான் கிடைக்கிறது. அவ்வாறு கிடைக்கும் காசு அரசாங்கத்திற்கு தேவைதானா, மக்களை அழித்து சம்பாதிக்கும் பணம் அரசாங்கத்திற்கு எதற்கு?" என்றெல்லாம் அனைத்து தரப்பு மக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர் முத்துராஜா கூறுகையில், "ஊரடங்கால் இந்த மதுக்கடை மூடல் என்பது குடிகாரர்களிடையே ஒரு அமைதியான வாழ்க்கையை ஏற்படுத்தியுள்ளத. இந்த நிலை தொடர்ந்தால் நிச்சயம் நாட்டில் ஒரு குடிகாரர்கள் கூட இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. ஆனால், அரசு மதுக் கடையை திறக்காமல் இருப்பதே நல்லது" என்றார்.
இதையும் படிங்க: 'கரோனாவால் எந்த வகை மக்களும் பாதிக்கப்படக்கூடாது' - அமைச்சர் கடம்பூர் ராஜு