திருப்பத்தூர் மாவட்டம் நாட்டராம்பள்ளி வட்டம் ஜெயபுரம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆறு மாத காலமாக தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என அப்பகுதி மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலர் ஆகியோரிடம் பல முறை புகார் கொடுத்துள்ளனர்.
ஆனால், அந்தப் புகார்கள் தொடர்பாக இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி ஆவேசமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென காலி குடங்களுடன் திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் இன்னும் ஒரு சில நாட்களில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதி அளித்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.