திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொல்லகுப்பம் ஊராட்சிகுட்பட்ட சக்தி நகர் பகுதியில் கானாற்றில் வரும் வெள்ள நீரை சேமிக்க மூன்று தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது.
மழைக் காலங்களில் கானாறுகளில் வெள்ளம் வரும் போதெல்லாம் இந்த மூன்று தடுப்பணைகளை கடந்து மதனஞ்சேரி, இளையநகரம், கொல்லகுப்பம், உதயேந்திரம் பேரூராட்சி, வடச்சேரி, சின்னபள்ளிகுப்பம் உள்ளிட்ட கிராமங்களை கடந்து ஆம்பூர் பாலாற்றில் கலக்கிறது.
இந்த தடுப்பணைகளில் சேமிக்கபடும் நீர் ஆயிரக்கனக்கான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி பெறவும், சுமார் 10 க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு குடிநீர் ஆதரமாகவும் இருந்து வருகிறது. இதில் சக்தி நகர் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்பணையை அதே பகுதி சேர்ந்த குமார் என்பவர் ஒப்பந்தம் எடுத்து கட்டியுள்ளார்.
கட்டப்பட்ட அந்த தடுப்பணை தரமற்ற கற்களால் கட்டியுள்ளதால் தூள் தூளாக விழும் நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் அவரே அங்குள்ள தடுப்பணை ஓரமாக மணல் எடுத்து இரவு நேரங்களில் குவியல் குவியலாக சேர்த்து வைத்து விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் குமார் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் எடுத்து கட்டிய தடுப்பணை கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் முதல் மழை வெள்ளதிற்கே தடுப்பணையின் ஒரு புறம் அடித்து செல்லப்பட்டுள்ளதால் அங்கு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கபட்டுள்ளது.
இருப்பினும் அந்த பகுதியில் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து மணல் கடத்தும் நபரை கண்டித்துள்ளனர். இதற்கு அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று(ஜூலை 16) அனைவரும் ஒன்று சேர்ந்து தடுப்பணை பகுதியில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்துறையினர், ஊராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுப்பத்தாக உறுதியளித்த பின்னர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் திருவள்ளூர் மாவட்டம் முன்னேற்றம்!