தேனியில் ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மீறி, தனியார் நிதி நிறுவனம் பொதுமக்களிடம் கட்டாயமாக மாதத்தவணை வசூல் செய்வதாகக் கூறி நேற்று பாஜக இளைஞரணியினர், பொம்மையகவுண்டன்பட்டியில் இயங்கி வரும் அந்நிறுவனத்தின் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அலுவலக கதவுகள் அடைக்கப்பட்டன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அல்லிநகரம் காவல்துறையினர் பொதுமக்கள், பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் அவர்கள் தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இது குறித்து தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "வருமானம் இன்றி தவித்து வரும் சூழலில், மாதத்தவணை செலுத்த வலியுறுத்தி பொதுமக்களை கட்டாயப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், தவணை செலுத்தாதவர்களுக்கு அபராதத் தொகையை விதித்து கடன் சுமையை அதிகரித்து வருகின்றனர்.
இது மக்களை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகின்றது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை மீறி வங்கி, நிதி நிறுவனங்கள் செயல்பட்டால் போராட்டம் நடத்தப்படும்" என எச்சரித்தனர்.
இதையும் படிங்க: 'சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகள் தடய அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்'