நாமக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சக்திகணேசன் நேற்று (ஜூலை12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "கரோனா பாதிப்பு உள்ள இந்தக் காலக்கட்டத்தில் மேற்கு மண்டல காவல் துறை தலைவர் தலைமையில் தொற்று பரவுதலை தீவிரமாக தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு பொதுமக்களுடன் சுமூகமாக செல்வதை ஊக்குவிக்கும் வகையில் மனநலப் பயிற்சிகள் அளிக்கப்படும். தற்போதைய கரோனா காலத்திலும் குற்றத்தடுப்பு, சட்ட ஒழுங்கு பணிகள், மகளிர் நலன்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்.
சமூக காவல் பணி மூலம் பொதுமக்களிடம் சுமூக உறவோடு காவல் பணி மேற்கொள்ளப்படும். கரோனா காலத்தில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.
அதே சமயம் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் "காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய எந்த தகவலையும் தயங்காமல் பொதுமக்கள் உடனுக்குடன் தனக்கு தெரிவிக்கலாம். இதன் மூலம் சம்பவ இடத்திற்கு காவல் துறை விரைந்து சென்று, குற்றங்களை தடுக்க முடியும்.
ஈரோடு-நாமக்கல் எல்லையான பள்ளிபாளையம் பகுதி அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இப்பகுதி மக்கள் ஈரோடு மாவட்டத்திற்கு செல்ல சுயகட்டுப்பாட்டை மேற்கொண்டு தேவையற்ற பயணங்களை தவிர்த்து காவல்துறைக்கு ஒத்துழைக்கவேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: காலை 10.30 மணிக்குள் வரவேண்டும்.. ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு!