உலகளாவிய பெருந்தொற்றுநோயான கோவிட்-19 பாதிப்பு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவிவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட பரவலை அடையும் நிலையில் அதன் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் தளர்வளிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 38ஆக உயர்ந்துள்ளது. தளர்வளிக்கப்பட்ட பின்னர், பாதிப்பு எண்ணிக்கை மாவட்டத்தில் அதிகரித்து வருவதாக சுகாதார வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் கரோனா சிறப்பு சிகிச்சை அளிக்கும் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதனிடையே, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வளையக்கார வீதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரோடு தொடர்பில் இருந்தவர்கள், அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தொற்றுநோய் பரவாமல் இருக்க ஈரோடு பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவந்த நேதாஜி தினசரி காய்கறிச் சந்தை பகுதியில் தொடர்ந்து கரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக ஈரோடு மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "காய்கறிச் சந்தையில் அதிகளவில் மக்கள் கூட்டம் கூடுவதால், நோய்ப்பரவல் தீவிரமடைய வாய்ப்புள்ளது. எனவே, அதனை தடுக்க இன்று முதல் (ஜூன்25) வருகிற 30ஆம் தேதி வரை காய்கறிச் சந்தை அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மட்டுமே செயல்படும். குறிப்பாக, காய்கறிச் சந்தையில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே காய்கறிகள் விற்பனை செய்யப்படும். பொதுமக்கள் தங்களது பகுதிகளிலேயே காய்கறிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.