திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சுமார் இரண்டு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 90 சதவீதம் பேர் பெண்கள் ஆவர்.
இவர்கள், கடந்த மார்ச்-ஏப்ரல் மாதம் அமல்படுத்தப்பட்ட கடுமையான ஊரடங்கால் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
எனவே தங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பீடி தொழிலாளர்கள் நல மருத்துவமனை மூலம் நாடு முழுவதும் உள்ள பீடி தொழிலாளர்களின் விவரங்களை சேகரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் தங்களது ஆதார் எண் மற்றும் பீடி கடையில் கொடுக்கப்பட்ட அடையாள அட்டை எண் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை குறிப்பிட்ட நம்பர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் படி மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதையறிந்து கிராமப்புறங்களில் உள்ள பீடித் தொழிலாளர்கள் தங்களது விவரங்களை குறுஞ்செய்தியாக அனுப்பி வந்தனர். எனினும் 20 ஆயிரம் பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து தொழிலாளர் நல வாரிய அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “மத்திய அரசு பீடி தொழிலாளர்கள் விவரங்களை சேகரித்து அனுப்பும்படி எங்களுக்கு கட்டளையிட்டது. அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொழிலாளர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 20 ஆயிரம் பேர் மட்டுமே விவரங்களைக் அனுப்பியுள்ளனர். அதே சமயம் இரண்டு மாவட்டங்களிலும் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் இருக்கின்றனர். மீதமுள்ளவர்கள் ஏன் விவரங்களை அனுப்பவில்லை என்று தெரியவில்லை” என்றார்.