ஆடி அமாவாசையில் விரதமிருந்து மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.
ஆனால், கரோனோ அச்சம் காரணமாக ஆடி அமாவாசையான இன்று கடலில் குளிக்கவோ, தர்பணம் செய்யவோ மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.
இதனால், காசிக்கு நிகராக விளங்கும் காமேஷ்வரம், கோடியக்கரை, பூம்புகார் கடற்கரை என நாகையில் உள்ள முக்கிய கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் தர்ப்பணம் செய்ய வந்த பொதுமக்களை திருப்பி அனுப்பினர்.
அதனால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பூஜை பொருள்களுடன் இருசக்கர வாகனம், கார்களில் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இருந்த போதிலும், நாகை கடற்கரையில் திருப்பி அனுப்பப்பட்ட பொதுமக்கள், சாமந்தான் பேட்டை கடற்கரைக்கு சென்று, அங்கு ஐயர் இல்லாமல் நீராடி விட்டு சென்றனர்.
இது குறித்து தர்பணம் செய்ய வந்தவர்கள் கூறுகையில், "கரோனா அச்சம் காரணமாக கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதன் காரணமாக எங்களது முன்னோர்களுக்கு தர்பணம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகிறோம்" என வருத்தம் தெரிவித்தனர்.
மேலும் கடற்கரையில் பொதுமக்கள் கூடுவதைத் தவிர்க்க காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'சமூக வலைதளங்களில் இழிவுபடுத்துவோரை தண்டிக்க வேண்டும்' - வைகோ