சேலத்தில் அரசு பொது மருத்துவமனை தவிர 11 தனியார் மருத்துவமனைகளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் சிகிச்சை அளிக்கவும் முன்னதாக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களில் சேலத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை வழங்க பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக நோயாளிகளிடமிருந்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
அதனடிப்படையில், விசாரணை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகம், புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெறவும் பரிசோதனை செய்யவும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது.
இந்நிலையில், சேலம் கொண்டலாம்பட்டி அருகே இயங்கி வரும் பிரியம் மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்க பன் மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதியாகத் தெரிய வந்தது.
மேலும் அம்மருத்துவமனையில் இருக்கும் படுக்கை வசதியைவிட கூடுதலாக நோயாளிகளை அனுமதித்து அறைகளில் அடைத்து வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதேபோல், பிரியம் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் நவீன் குமார் என்பவர் வெளிநாட்டில் மருத்துவப் பட்டம் பெற்றுவிட்டு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் பதிவு பெறாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்ததாகவும் சுகாதாரத் துறைக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இதையடுத்து சுகாதாரத்துறை அலுவலர்கள், கரோனா நோயாளிகள் உள்பட எந்த நோயாளிகளுக்கும் அம்மருத்துவமனை சிகிச்சை அளிக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதனை சேலம் மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் மருத்துவர் பிரவீன் குமார் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவளிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகள் அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.