விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பிற்கு அனுமதி வழங்கியுள்ள மத்திய அரசின் நடவடிக்கையை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வரவேற்றுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், ஜூன் 24ஆம் தேதி நடைபெற்றது. அதில், விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை அனுமதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்காக, 'இன் - ஸ்பேஸ்' எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்தை உருவாக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இவ்வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் தலைவர் சிவன், அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “விண்வெளித் துறையில், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. இது மிகப்பெரிய சீர்திருத்தமாகும். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, விண்வெளித் துறையில் விரைவான வளர்ச்சியை உறுதிப்படுத்தும். மேலும், உலக விண்வெளி பொருளாதாரத்தில், இந்தியா முக்கிய பங்கு வகிக்க உதவும்.
இஸ்ரோ மேற்கொள்ளும் கிரகங்களுக்கு இடையிலான ஆய்வு திட்டங்களிலும், இனி தனியார் நிறுவனங்கள் பங்கேற்கலாம். இதன்படி,
- ராக்கெட்டுகள் மற்றும் செயற்கைக்கோள்களை உருவாக்குதல்
- வணிக அடிப்படையில் ஏவுதளத்தை அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட, அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
தனியார் நிறுவனங்களின் பங்களிப்பால், இஸ்ரோவின் செயல்பாடுகள் ஒருபோதும் குறையாது. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இன் ஸ்பேஸ் மையத்தில், தொழில், கல்வி மற்றும் அரசுத் துறை பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். இந்த மையம் முழுதுமாக செயல்பட, மூன்று முதல் ஆறு மாதம் வரை ஆகும். எனினும், விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள், இன் ஸ்பேஸ் மையத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து, இன் ஸ்பேஸ் மையம் எடுக்கும் முடிவுகள் அடிப்படையில் பங்குதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இந்த சீர்திருத்தம் மூலம் உருவாகும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள, இளைஞர்கள் பலர் முன்வருவர் என நம்புகிறேன். உலகளவில் மிகப் பெரிய தொழில்நுட்ப சக்தியாக இந்தியாவை உயர்த்த, தனியார் நிறுவனங்களை நான் முழு மனதோடு அழைக்கிறேன்” என்றார்.