கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு அடுத்த புத்தன்சந்தை பகுதியை சேர்ந்த பெண்கள் சுய உதவி குழு சார்பில் தனியார் வங்கியில் வங்கி கடன் எடுக்கப்பட்டிருந்தது. இவர்கள் கடனுக்கான வட்டித் தொகையை மாதந்தோறும் தவறாமல் கட்டி வந்தனர்
இந்நிலையில் கரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக அவர்கள் வட்டி கட்டவில்லை. இதனால் வங்கியை சார்ந்தவர்கள் வந்து தங்களை மிரட்டுவதாக பெண்கள் சுய உதவி குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் அவர்கள், " நாங்கள் எல்என்ஜே பெண்கள் சுய உதவி குழுவில் உறுப்பினர்களாக உள்ளோம். நாங்கள் தனியார் வங்கி ஒன்றில் சுய உதவி குழு சார்பில் வங்கி கடன் எடுத்திருந்தோம்.
இந்தக் கடனுக்கு முறையாக வாரந்தோறும், மாதந்தோறும் வட்டி கட்டி வந்தோம். ஆனால் கரோனாவால் வேலை இன்மை காரணமாக எங்களால் லோனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் வங்கியில் எங்களது லோனுக்கு இருமடங்கு வட்டி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கியின் பணியாளர்கள் எங்களை உடனடியாக அசலும், வட்டியும் கட்டும்படி மிரட்டல் விடுக்கின்றனர்.
எனவே வங்கி தவணை கட்டுவதற்கு எங்களுக்கு கால அவகாசம் வழங்குவதுடன், வட்டி குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.