மின்கட்டணத்தை இரண்டு இரு மாதங்களாக பிரித்து கணக்கீடு செய்ய உத்தரவிடக்கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “மின் கட்டண நிர்ணயத்தில் எந்த சட்ட விரோதமும் இல்லை என்பதும், நியாயமான முறையிலேயே மின் கணக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
அரசு தரப்பு வாதத்தின் படி, 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்திய நுகர்வோர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டும் என்பதும், முதல் 100 யூனிட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதும் தெளிவாகிறது.
நுகர்வோர் முதல் 100 யூனிட்க்கான கட்டண சலுகையைப் பெற நான்கு மாதங்களுக்கான மின் கணக்கீட்டை இரண்டு இரு மாதங்களுக்கு என பிரிப்பது அவசியமாகிறது. இல்லாவிட்டால் அந்த முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் சலுகையை நுகர்வோர் பெற இயலாது என்பதும் தெரிய வருகிறது.
மின் கட்டணத்தை நிர்ணயிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் அடிப்படையில், மின் கணக்கீடு செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. நியாயமான முறையிலேயே மின் கணக்கீட்டு நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.
ஊரடங்கு காலத்தில் மின் நுகர்வு பயன்பாடு அதிகமாக தான் இருக்கும் என்பதை யார் வேண்டுமானாலும் புரிந்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் ஒரு கோடியே 75 லட்சம் மின் நுகர்வோர் உள்ளநிலையில் மனுதாரர் கூறும்படி கணக்கீடு செய்ய இயலாது.
கரோனா காரணமாக வீடுகளுக்கு சென்று மின் அளவீட்டை கணக்கிடாமல் போனதற்கு வாடிக்கையாளர்கள் காரணம் அல்ல என்ற மனுதாரரின் வாதத்தை ஏற்க முடியாது. கரோனா ஊரடங்கை சமாளிக்க அரசுக்கு நிதி தேவை உள்ள நிலையில், மக்கள் நிலைமையைப் புரிந்து கொண்டு, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியையும், கட்டணங்களையும் முறையாக செலுத்த வேண்டும்.
மின் கணக்கீட்டை பொறுத்தவரை தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்ட நடைமுறையில் குற்றம் கண்டுபிடிக்க இயலாது. மின்சார வாரியத்தின் உத்தரவு தன்னிச்சையானது என்று கூற எந்த காரணங்களும் இல்லை.
போதுமான விளக்கங்கள் மின்வாரியம் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களும் பயனடைந்துள்ளனர். ஒருவேளை மின் கணக்கீடு செய்ததில் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏதேனும் புகார் இருந்தால், வாடிக்கையாளர்கள் சட்டப்படி அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளலாம்” என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.