ஆடி அமாவாசை தினத்தில் இந்து மதத்தினர் தங்களது மூதாதையர்களுக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்வது வழக்கம். அந்த வகையில் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று (ஜூலை 20) கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக அம்மா மண்டபம் பூட்டப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்ப்பணம் கொடுப்பதற்காக வந்த பொதுமக்களைக் காவல் துறையினர் திருப்பியனுப்பினர். அம்மா மண்டபம் மட்டுமின்றி அதையொட்டிய காவிரி கரையோரத்தில் ஆங்காங்கே மக்கள் தர்ப்பணம் கொடுப்பார்கள். இந்த ஆண்டு அனைத்துப் பகுதிகளிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தர்ப்பணம் செய்து வைக்கும் புரோகிதர்களும் மண்டபத்திற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, இது தொடர்பான அறிவிப்பை மாநகராட்சி அறிவித்திருந்தது. எனினும், இந்த அறிவிப்பைப் பார்க்காத பலர் இன்று பொருள்களுடன் மண்டபத்திற்கு வந்தனர்.