ராமநாதபுரத்தில் இமானுவேல் சேகரனின் 63ஆவது நினைவு தினம் நாளை செப்டம்பர் 11 அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு காவல்துறை துணைத்தலைவர் ஜெயந்தி முரளி தலைமை முன்னேற்பாடு குறித்த கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தென் மண்டல ஐஜி முருகன், ராமநாதபுரம் சரக டிஐஜி மயில்வாகனன், காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக், எஸ்.பிக்கள் உள்ளிட்ட பல உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஏடிஜிபி, "இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை 10 உயர் அலுவலர்கள் கொண்ட 4000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கரோனா 144 தடை உத்தரவு அமலில் உள்ள காரணத்தால் பொதுமக்கள் ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் ஆட்சியரிடம் அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவர். அனுமதியின்றி வருபவர்கள் மீது ஊரடங்குச் சட்டத்தை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
பரமக்குடி நகர் பகுதி முழுவதும் காவல்துறை தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் கொண்டு சோதனை செய்து வருகின்றனர்.
நாளை நடைபெற உள்ள நினைவஞ்சலி தினத்தில் 5 சிறிய ரக ஆளில்லா கேமரா மற்றும் பெரிய கேமரா என மொத்தமாக ஆறு கேமராக்கள் வான்வெளி கண்காணிப்பில் பயன்படுத்தப்பட உள்ளது. இந்த ஆள்ளில்லா கேமராவை ராமநாதபுரம் காவல் துறை கண்காணிப்பாளர் கார்த்திக் ஆய்வு செய்தார்.