தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் நோய்ப்பரவலைத் தடுப்பதற்கு முகக்கவசம் அணிவதையும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிப்பதையும் அனைவரும் பின்பற்ற வேண்டுமென்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாநகரக் காவல் துறையினர் பேருந்து நிலையப் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்கள், மிதிவண்டிகளில் வந்த வாகன ஓட்டிகளை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தி அருகாமைப் பகுதியிலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு தகுந்த இடைவெளியுடன் நிற்க வைக்கப்பட்டவர்களிடம் முகக்கவசம் அணியாமல் வாகனங்களை இயக்குவதால் கரோனா தொற்று ஏற்பட வாய்பிருப்பது குறித்தும், ஒருவர் முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வருவதன் மூலம் அவருக்கு ஏற்படும் கரோனா தொற்று அவர் பணிபுரியும் இடங்களுக்கும், வீட்டிலிருப்போருக்கும், வீதியிலிருப்போருக்கும் பரவ வாய்ப்பிருப்பதால், அனைவரும் முகக்கவசம் அணிந்து வீடுகளை விட்டு வெளியேறிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
மேலும் முகக்கவசம் அணியாமல் அடுத்த முறை பிடிபட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்த காவல் துறையினர், முகக்கவசம் இல்லாதவர்களுக்கு முகக்கவசங்களை வழங்கி அனுப்பி வைத்தனர்.
கார் உள்ளிட்ட கனரக வாகனங்களில் பயணிப்போரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்தபடி வாகனங்களை இயக்க வேண்டுமென்றும் காவல் துறையினர் அறிவுறுத்தினர்.