முன்விரோதம் காரணமாக பழிக்குப் பழி வாங்கும் கொலை சம்பவங்கள் மதுரையில் அதிகரித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மதுரையின் சில பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது தொடர்பாக காவல் துறையினர் பலமுறை எச்சரித்தும் எச்சரிக்கையை மீறி ஆங்காங்கே சுவரொட்டிகளை ஒட்டி சிலர் அச்சுறுத்தி வருகின்றனர்.
மதுரை கரும்பாலை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரியான ராஜசேகர் என்பவரை கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக சமூக செயற்பாட்டாளர்கள் உள்பட 8 பேரை பழிவாங்கும் நோக்கோடு கடந்த சில நாள்களுக்கு முன்பு எட்டு பேரில் ஒருவரான முருகன் என்பவரை மருத்துவமனையில் இருந்தபோது மருத்துவமனைக்கே சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.
இந்நிலையில், மீதமுள்ள 7 பேரை கொலை செய்யும் நோக்கோடு பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு "அடக்க முடியாத கோபத்தை கட்டி வை, காலம் உன்னிடம் வரும், வெற்றியும் வீரமும் உன்னிடமே பட்டா பயலுக" என்ற வாசகம் அடங்கிய சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கரும்பாலை பகுதியைச் சேர்ந்த சிறார்கள் உள்பட எட்டு பேரை அண்ணாநகர் காவல் துறையினர் கைது செய்து அவர்கள் மீது ஐந்து பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழி தீர்க்கும் எண்ணத்தோடு மதுரை மாநகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டும் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மதுரை மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் கடலில் தவறி விழுந்து மீனவர் மாயம்!