இதுதொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசுத் தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் பதினோராம் வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது எனவும், மார்ச் 24ம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வினை எழுதாத தேர்வர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், மறுதேர்விற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகளில், ஜூன் 18ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும், இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் மார்ச் 24ம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை எழுத முடியாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 27ம் தேதியன்று மேற்கண்ட பாடங்களுக்கு மறுதேர்வு நடத்துதல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
மார்ச் 24 ம் தேதி நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்விற்கான வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை தேர்வு எழுத முடியாத தேர்வர்களுக்கு மட்டும் வரும் 27ம் தேதி பள்ளி மாணவர்கள், அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே தேர்வெழுத வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் தனித்தேர்வர்கள் பொறுத்தமட்டில் அவர்கள் ஏற்கனவே பிற தேர்வுகளை எழுதிய தனித்தேர்வு மையங்களிலேயே தேர்வுகள் நடத்தப்படவுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.