மதுரை மாவட்டம், கூத்தியார்குண்டு அருகேயுள்ள கருவேலம்பட்டி பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்குவாரியில் இருந்து வெளிவரும் தூசியினால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வாழை மரங்கள் மற்றும் சுற்று சூழலுக்கு அதிக அளவில் மாசுபடுவதால் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டு திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் நாகராஜ் தலைமையில் ஆய்வுகள் மேற்கொண்டு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக கல்குவாரியில் உள்ள அரவை இயந்திரங்களுக்கு இயங்க அனுமதி அளிக்கப்பட்டதாக மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மீண்டும் தொடங்குவதற்கு யார் அனுமதி அளித்தார்கள் என்ற கேள்வியுடன், கப்பலூர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் அந்த தனியார் கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி மனு கொடுக்க வந்தனர்.
அப்போது, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வளாகத்தில் கல்குவாரியால் தூசி படிந்த வாழை இலையுடன் மனு அளிக்கவந்த விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே காவல் துறையினர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய ஆணையரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், கல்குவாரியை மூடாதபட்சத்தில் வன்முறையை கையாலுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.