குமரி மாவட்ட சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் தில்லைநாதன் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், ”கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்துவருகிறது. பொதுமக்கள் வேலையிழந்து, வருமானம் இழந்து உணவுக்கு வழியில்லாமல் நலிவுற்று காணப்படுகின்றனர். இந்நிலையில் அரசாங்கம் வங்கிக்கடன், சுய உதவி குழுக்களின் கடன்கள் சிறு குறு விவசாயிகள், தொழிலாளர்கள் தனியார் வங்கி கடன்கள் பைனான்ஸ் ஆகியவற்றின் கடன்களை உடனடியாக கேட்கக்கூடாது என்றும், அதிக வட்டி இதற்காக வசூலிக்கக்கூடாது என்றும் அரசாங்கம் உத்தரவிட்டது.
தற்போது அந்த உத்தரவை மீறும் விதமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம், ஹெச்டிபி நிறுவனம் ஏக்ஸ்விடாஸ், எல்&டி போன்ற தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனுக்கு பலமடங்கு வட்டியுடன் கடனை வசூலிப்பதற்காக தற்போது களமிறங்கியுள்ளனர். வீடு வீடாகச் சென்று ஏஜென்ட் என்ற பெயரில் அடியாட்களை அனுப்பி வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் அத்துமீறி வரும் செயல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. காவல் துறை கரோனா என்ற பெயரை பயன்படுத்தி இதனை கண்டுகொள்ளாமல் செல்கின்றனர்.
அதேசமயம் ஏழைகளை குறிவைத்து வேட்டையாடும் இந்த பைனான்ஸ் நிறுவனங்களில் அராஜகம் தொடர்ந்தால் அவற்றின் லைசென்சை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து ஏழை எளிய மக்களை காப்பாற்ற வேண்டும். எனவே இதுபோன்று தவறு செய்யும் பைனான்ஸ் நிதி நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.