கோவை மாவட்டத்தில் இரு சமுதாயத்தினருக்கு இடையே மோதலை உருவாக்கும் வகையில் தகவலைப் பரப்பியதாக ஆனந்த குமார் என்பவர், சூலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி, ஆனந்த குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "சூலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆனந்த குமார் 10 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவாதமும், அதே தொகைக்கான இரு நபர் உத்தரவாதமும் வழங்க வேண்டும்.
இதுபோன்ற தகவல்களை இனி பரப்ப மாட்டேன், நடந்த தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் உறுதி மொழி பத்திரம் அளிக்க வேண்டும். உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எழுத்தர் சங்கத்தில் பதிவு செய்துள்ள எழுத்தர்களுக்கு தலா 1,500 வீதம் வழங்க வேண்டும்.
மனுதாரர் 4 வாரத்திற்கு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கக் கூடாது.
விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என்ற நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டார்.