ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஜூலை 2ஆம் தேதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் சட்டவிரோதமாக விசைப்படகில் இலங்கைக்கு சென்றுள்ளார்.
இலங்கை நெடுந்தீவு கடற்கரையில் இலங்கை கடற்படை மேற்கொண்ட விசாரணையில் ராமேஸ்வரத்திலிருந்து சட்டத்திற்கு புறம்பாக விசைப்படகு மூலம் இலங்கைக்கு வந்தது தெரிந்தது. இதுகுறித்து இலங்கை கடற்படை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து தனிமைப்படுத்தினர்.
இந்தத் தகவலை வைத்து ராமேஸ்வரத்தில் கடந்த ஐந்து நாள்களாக கியூ பிரிவு காவலர்கள் தீவிர ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ராமேஸ்வரம் மல்லிகை நகரைச் சேர்ந்த ராக்லாண்ட் என்பவரின் விசைப்படகில் அதே பகுதியை சேர்ந்த விஜய் 38 என்பவர் ஏற்றிச்சென்று இலங்கை நெடுந்தீவு கடலில் மிதவை படகு ஒன்றில் இறக்கிவிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து விஜய் என்பவரை கியூ பிரிவு காவலர்கள் கைது செய்து துறைமுக காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர் விசாரணையில் இவர் பணம் பெற்றுக்கொண்டு ஏஜென்டாக சென்றுள்ளார் என தெரிந்தது.
இதனையடுத்து துறைமுக காவல்துறையில் வழக்குப்பதிவு செய்து இவரை சிறையில் அடைத்தனர். மேலும், படகின் உரிமையாளரை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க : குட்டிப்போட்ட வட்டி: வீடு புகுந்து இளைஞரைத் தூக்கிய கந்து வட்டிக்காரர்!