கோவிட்-19 வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. அதன் பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய ஊரடங்கை மத்திய, மாநில அரசுகள் நடைமுறைப்படுத்தி உள்ளன. அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டு, தீவிர கண்காணிப்பிற்குள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கர்நாடக எல்லையோர மாவட்டமான கிருஷ்ணகிரியில் நூற்றுக்கணக்கானோர் ஊரடங்கு தடையை மீறி அனுமதியின்றி வெளியேறி வருவதால், கரோனா பரவும் அபாயம் அதிகமாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடைசி பகுதியான ஓசூரை அடுத்துள்ள அத்திப்பள்ளி சோதனைச்சாவடி அருகே கூடிய மக்கள், தங்களை வெளியே செல்ல வேண்டுமெனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கேயே அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து, தகவல் அறிந்து விரைந்து வந்த காவலர்கள் அவர்களிடம் சமரசம் பேசிவருகின்றனர். இருப்பினும் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்துச் செல்வதாக தெரியவில்லை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவிட்-19 அதிக அளவில் பரவும் சூழல் நிலவிவருவதாக சுகாதாரத்துறையினர் கூறி வருவதை பொதுமக்களுக்கு எடுத்துச்சொல்லி, மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தருமாறு காவலர்கள் தொடர்ந்து அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர்.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த ஒரு வாரமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரட்டிப்பாக உயர்ந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சென்னையிலிருந்து கோத்தகிரி வந்தவர்களை திருப்பி அனுப்பக்கோரி போராட்டம்!