கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் ஏற்காடு அடிவாரம் மற்றும் மலைப்பாதையில் கன்னங்குறிச்சி, கொண்டப்பநாயக்கன்பட்டி , விநாயகம் பட்டி , கோரிமேடு, அழகாபுரம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள் காலை, மாலை இரு வேளைகளிலும் கூட்டம் கூட்டமாக நடைபயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
அவர்களிடம் காவல் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் பலமுறை முகக்கவசம் அணியுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனினும், நடைபயிற்சி மேற்கொள்வோர் ஒருவர்கூட முகக்கவசம் அணியாமல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அதிக அளவில் கூட்டமாக நடைபயிற்சி மேற்கொண்டு உலா வருகின்றனர்.
இதில் மாற்றம் கொண்டுவந்து கரோனா தொற்று பரவாமல் தடுக்க சுகாதாரத் துறை, காவல் துறை அலுவலர்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
ஏற்காடு உள்ளிட்ட மலைக் கிராம பகுதிகளில் இதுவரை கரோனா தொற்று இல்லை, எனினும் கரோனா பாதிப்புள்ள நபர்கள் யாராவது இருந்தால், இதன்மூலம் ஏற்காடு பகுதியும் கரோனா நோயாளிகள் அதிகம் உள்ள பகுதியாக மாறிவிடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.