பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாள்களாக படிப்படியாக உயர்ந்துவருகிறது. இதன் விளைவாக சென்னைக்கு பிற மாவட்டங்களிலிருந்து காய்கறிகளை ஏற்றிவரும் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வேறு வழியின்றி வாடகையைை உயர்த்தியுள்ளன.
இவர்களுக்கான அதிகபட்ச வாடகையை மொத்த காய்கறிகள் வாங்கும் வியாபாரிகள் கொடுப்பதால் காய்கறிகள் விலையை உயர்த்தியுள்ளனர்.
சிறு வியாபாரிகள் சந்தையில் வாங்கும் காய்கறிகளை கடைகளில் விற்கும்போது விலை உயந்துள்ளதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். இருப்பினும் வேறு வழியின்றி பொதுமக்கள் கடும் விலை உயர்விலும் காய்கறிகள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது, "காய்கறிகள் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் முதலில் டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பேச வேண்டும்.
பின்னர் திருமழிசை உள்ளிட்ட காய்கறிகள் விற்கப்படும் சந்தைகளில் வியாபாரிகள் பாதிக்கப்படாத வகையில் விற்பனை நடைபெறுவதற்குச் சாதகமான சூழல்களை ஏற்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், மாநகராட்சி நிர்வாகங்கள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் மக்கள் படும் துன்பத்திற்கு அரசு நிர்வாகமே காரணம் ஆகிவிடும்" என்று தெரிவித்துள்ளனர்.