திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராவாரம் திங்கட்கிழமையன்று குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கோடு கடந்த மூன்று மாத காலத்திற்கு மேலாக குறைதீர்வு கூட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தொலைபேசி வழியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால் அதுகுறித்து பெரும்பாலான பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், பொதுமக்கள் தங்களுடைய குறைகளை மனுவாக யாரிடம் எப்படி சமர்ப்பிப்பது என்று தெரியாமல் தவித்து வந்தனர்.
இதனிடையே தங்கள் குறைகளை மனுவாக எழுதிக்கொண்டு வந்த பொதுமக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வந்தபோது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நுழையும் முன்னரே நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் துறையினரின் பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் நுழைவாயில் வெளியிலேயே நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரை வழிமறித்து தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் சற்று பரபரப்பாக காணப்பட்டது.