கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஏ.டி.எம் சேவை மையம் இயங்கிவருகிறது.
இந்த ஏ.டி.எம் மையத்தின் மூலம் மேக்காமண்டபம், வேர்கிளம்பி, மணலிக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைந்து வந்தனர்.
இந்த நிலையில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட ஓரிரு வாரங்களிலேயே இந்த ஏ.டி.எம் சேவை மையம் பூட்டப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாகவே இது செயல்படாமல் இருந்து வருகிறது.
இதனால், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தக்கலை, அழகியமண்டபம் பகுதிக்குச் சென்று பணம் எடுக்கும் சிரமத்திற்கு உள்ளாகினர். ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து சேவைகளும் முடங்கியுள்ளதால் இந்த ஏ.டி.எம் சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள் சார்பில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளருக்கு பல முறை கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால், அதற்கு பலனில்லாத நிலையில், செயல்படாமல் பூட்டிக்கிடந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏ.டி.எம் சேவை மையத்திற்கு நள்ளிரவில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் மாலை அணிவித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சென்றுள்ளனர்.